மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2015ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைத்துள்ளதால், 222.47 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு கட்டங்களாகப் பணிகள் நடைபெறும் எனவும், 33 மாதத்தில் பணிகளை முடிப்பதற்கான ஒப்பந்தக் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை வளாகம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான 30 படுக்கைகளுடன் கூடிய அறை, 150 எம்பிபிஎஸ் மாணாக்கர்கள் செவிலியர்கள் பயிலும் வகையிலான வகுப்பறைகள், அவர்களுக்கான தங்கு விடுதிகள், ஆடிட்டோரியம், உணவகம், மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள், இயக்குனருக்கான இல்லம், வணிக வளாகம் , உணவகம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.