இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 71 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இமாச்சலில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) ஒன்கர் சந்த் சர்மா கூறுகையில், “கடந்த மூன்று தினங்களில் 71 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் மாயமானார். இரவு வரை மொத்தம் 57 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன”.
கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சிம்லா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சம்மர் ஹில், ஃபாகி மற்றும் கிருஷ்ணாநகர் ஆகிய மூன்று பகுதிகள் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
“கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நகரின் துணைப் பகுதிகளான இண்டோரா மற்றும் ஃபாட்பூரில் இருந்து 1,731 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் விமானப் படையினர், இராணுவத்தினர் , தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உதவியுடன் நடந்து வருகிறது” என்று இணை ஆணையர் நிபுன் ஜிந்தால் தெரிவித்தார்.
இதனிடையே, இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பருவமழை காலத்தின் சராசரி மழையளவு 730 மி.மீ. ஆனால், கடந்த 54 நாட்களில் ஏற்கெனவே 742 மி.மீ மழை பெய்துவிட்டது என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்குமுன் இப்படி ஒரு பேரழிவு ஏற்பட்டதில்லை’ என இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தசர் சிங் தெரிவித்துள்ளார் . கடந்த 50 ஆண்டுகளில் இப்படி ஒரு இயற்கை சீற்றத்தை தாங்கள் எதிர்கொண்டதில்லை எனவும், இதனால் இமாச்சல பிரதேசத்தில் 10,000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) இமாச்சல் பிரதேசத்தின் ஆளுநர் சிவ் பிரதாப் ஷுக்லா மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒரு சமுதாய கூடத்தில் சந்தித்தார் . பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.