உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் லக்ஷ்மண் ஜுலா பகுதியில் தங்கும் விடுதி ஒன்றின் இடிபாடுகளில் இருந்து 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று புதன்கிழமை மேலும் 4 உடல்களும் மீட்கப்பட்டிருப்பதாக பவுரியில் உள்ள எஸ்எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் உத்தராகண்டில் கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
பவுரி – கோட்வார் – துகாடா தேசிய நெடுஞ்சாலையில் ஆம்சூர் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. அதேபோல், ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை பிபால்கோடி பரேன்பானிக்கு அருகில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு போக்குவரத்து தடைபட்டுள்ளதாக மாநில பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.