கடந்த சில தினங்களாகப் பாகிஸ்தான் தேவாலயங்கள் தாக்கப்பட்டு பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் ஃபைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவத் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், இஸ்லாமியர்களின் புனிதமான நூலான குரானை இழிவுபடுத்திக் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்துள்ளார். இதனைக் கண்டித்த இஸ்லாமியர்கள் அவரது வீட்டைச் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அருகே இருந்த தேவாலயத்துக்குள் புகுந்த இஸ்லாமியர்கள் சேதப்படுத்தினர்.
மேலும், கிறிஸ்துவர்கள் வாழும் பகுதியில் புகுந்த அந்த கும்பல், அங்கிருந்த 5 தேவாலயத்தைத் தாக்கி இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் வேதாந்த படேல் கூறியதாவது: “அமெரிக்கா வன்முறை அல்லது மதரீதியாக தாக்குதல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். மத ரீதியான வன்முறை மிகவும் வருத்தமாளிக்கிறது. எனவே அமைதியான, வன்முறையற்ற கருத்து சுதந்திரத்தைப் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.