இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பேரழிவு குறித்து, டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, இமாச்சலப் பிரதேசத்தில் 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. போதாக்குறைக்கு, மேகவெடிப்பு ஏற்பட்டதால் பேய் மழை கொட்டுகிறது. இது தவிர, கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஆகவே, ஒட்டுமொத்த மாநிலத்தையும் பேரழிவு பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்திருக்கும் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்தாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவை உட்பட 1,762 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து விட்டதாகவும், 8,952 வீடுகள் பாதியளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும் மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக, டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் முக்கிய அமைச்சர்களான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். நாளை காலை நட்டா இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.