இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நாளை பார்வையிடுகிறார்.
இதுகுறித்து பா.ஜ.க. தலைமை வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இடைவிடாத பருவமழை, மேகவெடிப்பு போன்ற காரணங்களால் இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 உயிரிழந்தனர். நிலச்சரிவு, மழை, வெள்ளத்துக்கு இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரழிவை பார்வையிடுவதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, நாளை இமாச்சலப் பிரதேசத்துக்குச் செல்கிறார். காலையில் சிர்மௌர் மாவட்டத்திலுள்ள பௌண்டா சாஹிப் செல்லும் நட்டா, பின்னர் சிர்மௌரி தால், கச்சி தாங் ஆகிய கிராமங்களுக்குச் செல்கிறார். அங்கு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்யும் நட்டா, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
பின்னர், நிலச்சரிவு மற்றும் கோவில் இடிந்து விழுந்த சிம்லாவின் சம்மர் ஹில் பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, சிம்லா மற்றும் பிலாஸ்பூர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து விவாதித்து ஆலோசனை நடத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.