காங்கிரசுக்கு தைரியம் இருந்தால், அக்கட்சி ஆட்சி செய்த 50 ஆண்டுகளில் செய்த பணிகள் குறித்து அறிக்கையாக வெளியிடட்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு போபாலில் நடந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சரமான அமித்ஷா பங்கேற்றார்.
இதில் உரையாற்றிய அமித்ஷா,
மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னெடுத்த நலத்திட்டங்களை காங்கிரஸ் நிறுத்தியது. அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத்தை, ஊழல்நாத் என சமூக வலைதளத்தில் அழைக்கின்றனர்.
2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ம.பி., மாநிலத்திற்கு ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், மோடி ஆட்சியில், 9 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
காங்கிரசுக்கு தைரியம் இருந்தால், 50 ஆண்டுகளில் செய்த பணிகள் குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும். அரசியலில் பொறுப்புணர்வை கொண்டு வரும் பாரம்பரியத்தை ஏற்படுத்தி உள்ளோம். எங்கெல்லாம் பாஜக அரசு உள்ளதோ அங்கெல்லாம் பொறுப்புணர்வு இருக்கும் என தெரிவித்தார்.