ஜோகன்னஸ்பர்க்கில் கட்டப்பட்டு வரும் சுவாமி நாராயணன் கோவிலை முப்பரிமாண முறையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் காட்சிப்படுத்த தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய இந்துக் கோவிலாக சுவாமி நாராயணன் கோவில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 34,000 சதுர மீட்டரில் கலாச்சார மையம், 3,000 இருக்கைகள் கொண்ட அரங்கம், 2,000 இருக்கைகள் கொண்ட கூடம், ஆராய்ச்சி மையம், வகுப்பறைகள், கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு மையங்களுடன் இக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கட்டுமானப் பணி 2025-ம் ஆண்டுதான் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருக்கிறார். அவரை தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் வரவேற்கிறார்கள். இந்த வரவேற்புக் குழுவினர், ஜோகன்னஸ்பர்க் நகரில் கட்டப்பட்டுவரும் தெற்காசியாவிலேயே மிகப்பெரியதாக கட்டப்பட்டு வரும் சுவாமி நாராயணன் கோவிலை முப்பரிமாண முறையில் (3டி) பிரதமர் மோடிக்கு காட்சிப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இத்தகவலை வரவேற்புக்குழு உறுப்பினரான நரேஷ் ராமதார் தெரிவித்திருக்கிறார்.