சந்திராயன்-3 விண்கலம் இன்று மாலை நிலவில் தரையிறக்கப்படுவதை முன்னிட்டு, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்கள், பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
நிலவை ஆய்வு செய்வதற்கு ஏற்கெனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பி இருக்கின்றன. இவை அனைத்துமே வட துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டவை. ஆனால், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக முதன் முதலில் விண்கலத்தை அனுப்பியது இந்தியாதான். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விட்டது.
இதையடுத்து, 4 ஆண்டு முயற்சிக்குப் பிறகு, சந்திராயன்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி இந்தியா அனுப்பியது. இதற்குப் போட்டியாக லூனா-25 என்கிற விண்கலத்தை கடந்த 10-ம் தேதி ரஷ்யா அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த 21-ம் தேதி தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்டுப்பாட்டை இழந்த இந்த விண்கலம் 20-ம் தேதி கீழே விழுந்து நொறுங்கி விட்டது. இதனால், இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எழுந்தது.
எனினும், இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் நிலையில், இன்று மாலை சரியாக 6.04 மணியளவில் நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம் துரதிருஷ்டவசமாக கட்டுப்பாட்டை இழந்து விட்டதாலும், சமீபத்தில் ரஷ்யா அனுப்பிய லூனா விண்கலமும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விட்டதாலும், சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதேபோல, ரஷ்யாவின் லூனா-25 திட்டம் தோல்வியில் முடிந்ததால், இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் தரையிறக்கத்தை உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. எதிர்பார்த்தபடியே விக்ரம் லேண்டர் தரையிறங்கி, அதன் பிறகு ரோவர் வெற்றிகரமாக வெளியேறி செயல்படத் தொடங்கினால், அது இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படும். மேலும், நிலவின் தென் துருவத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு இந்தியா என்று வரலாற்றிலும் இடம் கிடைக்கும். எனவே, ரஷ்யா தவறவிட்ட வாய்ப்பை, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில்தான், சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையில் இறங்க வேண்டும் என்று உலக நாடுகளில் வசிக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களும் அந்தந்த நாடுகளில் இருக்கும் கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேபோல, இந்தியாலும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீமஹாகாலேஷ்வர் கோவிலில் பாஸ்மா ஆரத்தி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதேபோல, சத்தர்பூரிலுள்ள பாபா பாகேஸ்வர் தாம் கோவிலிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் மொஹ்சின் ரசா, ஹஜ்ரத் ஸா மீனா ஷா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கியாரா முகி ஹனுமன் கோயில், புனேயில் உள்ள சித்தி விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மோன்ரோயில் உள்ள ஓம் ஸ்ரீசாய் பாலாஜி கோவில் மற்றும் கலாச்சார மையத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு கோவிலில் யாகம் வளர்த்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.