திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு, நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான்-3 விண்கலம். இதன் மூலம் நிலவின் தென்துருவத்துக்கு முதன் முதலில் விண்கலத்தை அனுப்பிய வரலாற்றை இந்தியா படைத்திருக்கிறது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் வடதுருவத்தை ஆராய்வதற்காக விண்கலத்தை அனுப்பின. ஆனால், வித்தியாசமாக நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, இந்தியா விண்கலத்தை அனுப்பியது. ஆனால், 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான முயற்சிக்குப் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கினர்.
சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்டது. புவி வட்டப் பாதை பயணத்தை வெற்றிகரமாக முடித்த சந்திரயான்-3, கடந்த 1-ம் தேதி நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. நிலவுப் பயணத்தில் 3ல் 2 பங்கு தூரத்தை கடந்த சந்திரயான்-3, கடந்த 5-ம் தேதி இரவு 7 மணியளவில் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாலை 6.04 மணியளவில் சந்திரயான்-3 விண்கலத்தின் ‘லேண்டர்’ சாதனத்தை வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்கான முழு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண்பதற்காக இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தன. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், சந்திரயான்-3 பத்திரமாகத் தரையிறங்குவதற்காக கோவில்கலில் பிரார்த்தனை செய்தனர்.
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.Congratulations, India🇮🇳!#Chandrayaan_3#Ch3
— ISRO (@isro) August 23, 2023
இந்த நிலையில், திட்டமிட்டபடி, இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பபில் கால்பதித்து. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக சந்திரயான்-3 தரை இறங்கியதைப் பார்த்துக் கொண்டிருந்த பாரதப் பிரதமர் மோடி, கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, சந்திரயான்-3 வெற்றிக்காகப் பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதேபோல, தலைவர்கள் பலரும், நாட்டு மக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.