ரகசிய ஆவணங்களை கசியவிட்டது தொடர்பாக, அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் சுமார் 1 மணிநேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2022-ம் ஆண்டு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் இவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, இம்ரான் மீது ஊழல், மோசடி, முறைகேடு, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், தோஷகானா வழக்கும் ஒன்று, அதாவது, இம்ரான் கான் பிரதமராக இருந்த 2018 – 2022 காலகட்டத்தில், அவருக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, அரசு கஜானாவில் ஒப்படைக்காமல், விற்றுப் பணத்தை மோசடி செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழலில், இம்ரான் மீது நாட்டின் ரகசிய ஆவணங்களைக் கசியவிட்டதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது, 2022-ம் ஆண்டு தனது அரசு கவிழ்வதற்கு சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், தனது அரசை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா சதி செய்வதாகக் கூறி, இம்ரான் கான் ஒரு ஆவணத்தைக் காட்டினார்.
இது தொடர்பாக, இம்ரான் கான் மீது மத்திய புலனாய்வு அமைப்பினர் (எஃப்.ஐ.ஏ.) கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், ரகசிய ஆவணங்களை கசிய விட்டது தொடர்பாக, அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இம்ரான் கானிடம், எஃப்.ஐ.ஏ. இணை இயக்குனர் அய்யாஸ் கான் தலைமையிலான குழுவினர் நேற்று சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, பொதுக்கூட்டத்தில் தான் வெளியிட்டது, அமைச்சரவையின் கூட்ட விவரங்கள்தான் எனவும், எந்த ரகசிய ஆவணங்களையும் தான் வெளியிடவில்லை எனவும் இம்ரான் கான் கூறியதாகத் தெரிகிறது.