இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் உளவுக் கப்பலை ஹம்பன்தோடா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை சீரமைத்துத் தருவதாகக் கூறி, சீனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இத்துறைமுகத்துக்கு சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்கிற உளவுக் கப்பல் கொண்டு வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இக்கப்பல் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நிலைகளை உளவு பார்ப்பதற்காக சீனாவிலிருந்து வருவதாகக் குற்றம்சாட்டி, அக்கப்பலை ஹம்பந்தோடா துறைமுகத்தில் நிலைநிறுத்த இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இந்திய அரசு எச்சரித்தது.
இதையடுத்து, ஒரு வாரத்துக்குப் பின் அக்கப்பல் சீனாவிற்குத் திரும்பிச் சென்றது. இதைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் இதுபோன்று உளவுக் கப்பல்களை சீனா நிலைநிறுத்த இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், சீனாவைச் சேர்ந்த “யுவான் வாங்-6” என்ற ஆய்வுக் கப்பலை ஹம்பந்தோடா துறைமுகத்தில் அக்டோபர் 25-ம் தேதி நிலைநிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இதுகுறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகத் துறை இயக்குனர் நலின் ஹெராத் கூறுகையில், “இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, சீன ஆய்வுக் கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் நிலைநிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து, சீனக் கப்பல் ஆய்வு நடத்தவுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.