எந்தப் போட்டியில் விளையாடுவதாக இருந்தாலும் நமது சிறந்த பங்களிப்பை தர வேண்டும், செஸ் விளையாட்டை அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்று பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.
FIDE 10வது சதுரங்க உலகக் கோப்பையில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்த ஆட்டத்தின் இறுதிப்போட்டி வரை சென்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். செஸ் போட்டிககளை முடித்துவிட்டு பிரக்ஞானந்தா இன்று சென்னைக்கு திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, “தமக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை, உலககோப்பை என்பது மிகவும் முக்கியமான தொடர் அதிலும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முதலில் கான்டிடேட் தொடரில் விளையாட வேண்டும். அதில் தேர்வானதே தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதல் சுற்றிலே தலைசிறந்த வீரர்களை தாம் எதிர்கொள்ள இருந்ததால் எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இந்த தொடரில் இல்லை. சவால்களை சந்திக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதுணையோடு இருந்தேன். அதற்கு ஏற்றார் போல் பயிற்சி மேற்கொண்டு இருந்தேன். தங்கம் கிடைக்காமல் போனது சிறிது வருத்தமாக இருந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்றதும் மகிழ்ச்சி தான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அடுத்தடுத்து நிறைய செஸ் போட்டிகள் வர இருப்பதால் அதற்கான பயிற்சிகளை தொடங்க வேண்டும். எந்தப் போட்டியில் விளையாடுவதாக இருந்தாலும் நமது சிறந்த பங்களிப்பை தர வேண்டும். மேலும் செஸ் விளையாட்டை அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை பாராட்டி இருப்பதும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.