தைவான் நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாகச் சீனா கூறி வந்தபோதும், தனி சுதந்திர நாடாக தைவான் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்து வருகிறது. இது சீனாவை ஆத்திரமடையச் செய்துள்ளது.
இந்த நிலையில், தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது வான் மற்றும் கடல் வழி ரோந்து பணிகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளைச் செய்து வருகிறது. அவ்வப்போது தைவான் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தும் வருகிறது.
இந்நிலையில், தைவானைச் சுற்றிலும் கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியில் இருந்து, செவ்வாய் கிழமை காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் சீனாவின் 11 போர் விமானங்கள் மற்றும் 10 கடற்படை கப்பல்கள் தைவானுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. குறிப்பாக, சீனாவின் ஹார்பின் பி.இசட்.கே.-005 ஆளில்லா விமானம் ஒன்று தைவான் ஜலசந்தியின் இடைக்கோட்டுப் பகுதியை மீறி உள்ளே நுழைந்துள்ளது. இது தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் வடகிழக்கு பிரிவிற்குள் அத்துமீறிச் சென்றுள்ளது. இதன்பின்னர் அந்நாட்டைச் சுற்றி வந்து தென்மேற்கு மூலையில் இடைக்கோட்டை மீண்டும் கடந்து சென்றது. இதனைத் தொடர்ந்து, மேலும் இரண்டு விமானங்களும் அந்த பகுதியைக் கடந்து சென்றன.
இதனைத் தைவான் நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் கண்டறிந்தது. இதனை அடுத்து அவற்றை விரட்டியடிக்கும் முயற்சியில் தைவானின் ராணுவம் களம் இறங்கியது. விமானங்கள், கப்பல்கள் மற்றும் தரை பகுதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஏவுகணைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சீன விமானங்களைத்தைவான் விரட்டியடித்தது. இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.