டெல்லி பல்கலைக்கழகத்தில் “ஜி20 தலைமைத்துவம் மற்றும் உலகத்தின் தாக்கம்” குறித்த நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசுகையில், “சந்திரயான்-3 தரை இறங்கிய நேரத்தில் உடலளவில் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டாலும், மனதளவில் பெங்களூருவில் இருந்தோம். இதனால் தான் சந்திரயான் தரை இறங்குவதைக் காண பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலிருந்து திரும்பினோம். லேண்டர் வெற்றிகரமாகத் தரை இறங்கியதும் மீண்டும் மாநாட்டில் கலந்து கொண்டோம். அப்போது சந்திரயான் தரை இறங்கியது பற்றித்தான் அரங்கமே பேசித் திகைத்தது. இதில் எனக்கு மிகப்பெரிய திருப்தி.
லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பல தலைவர்கள் நம்மை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டனர். நாம் செய்யும் அனைத்தும் உலகிற்குத் தேவையானது என்று நான் உணர்ந்தேன். ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டபோது, அதிகாரமளிக்கும் நிகழ்ச்சியாகக் கருதாமல், தேசிய அளவில் ஒரு கொண்டாட்டமாகவே கருதி ஏற்றுக் கொண்டோம். ஜி20-ன் தலைமைப் பொறுப்பில் 01.12.2022 முதல் 30.11.2023 வரை இந்தியா இருக்கும். மேலும், “ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்” என்பதைக் கருத்தில் கொண்டு “வசுதைவ குடும்பகம்” என்கிற மகா உபநிஷத்தின் உரையை ஜி20-க்கான கருப்பொருளாக எடுத்துக் கொண்டோம்.
நாடு முழுவதும் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், சிவில் அதிகாரிகள் மத்தியில் நடந்த ஜி20 மாநாட்டின் உச்சி மாநாடாக டெல்லி மாநாடு இருக்கும். ஜி20 குழுவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துர்க்கியே, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என 19 நாடுகள் உள்ளன. ஜி20 உறுப்பு நாடுகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதிப்படுத்துகிறது.
இஸ்ரோவின் சந்திரயான்-2 ஏமாற்றத்தைச் சரிப்படுத்தும் விதமாகச் சந்திரயான்-3 தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது ஒரு வரலாற்றுச் சாதனை. அமெரிக்கா, சீனா மற்றும் இரஷ்யாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நான்காவது நாடு என்கிற சாதனையை இந்தியா படைத்திருக்கிறது.