நேபாளத்தின் காத்மாண்டு மேயர் பலேந்திரா ஷா, தன் சீனச் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார்.
சீனா, 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டது.
இதில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல் பிரதேசம் இடம்பெற்றுள்ள நிலையில், இதை தெற்கு திபெத் என சீனா கூறி வருகிறது. அதேசமயம், நேபாளம் தனக்கு சொந்தமானது என கூறி வரும் லிம்பியாதுரா, காலாபாணி, லிபுலேக் பகுதிகளை, இந்தியாவுக்கு சொந்தமானதாக சீனா வரைபடத்தில் குறித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நேபாளத்தின் காத்மாண்டு மேயர் பலேந்திரா ஷா, தன் சீன சுற்றுப்பயணத்தை நேற்று ரத்து செய்தார்.
இது தொடர்பாக பலேந்திரா ஷா தன் சமூக வலைதள பதிவில்,’சீனாவின் புதிய வரைபடத்தில், நேபாளத்திற்கு சொந்தமான பகுதிகள் இந்தியாவின் பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, எங்கள் உணர்வுகளுக்கு எதிரானது. இதனால், சீனாவின் அழைப்பின்பேரில் அங்கு செல்வதாக இருந்த ஐந்து நாள் பயணத்தை ரத்து செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் புதிய வரைபடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், மலேஷியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த புதிய வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தின் , அக்சாய் சின் பகுதிகள் இடம்பெற்றது போல் தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தென்சீன கடல் பகுதிக்கு, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேஷியா ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இதனால் புதிய வரைபடத்தை நிராகரித்துள்ள இந்த நாடுகள், சீனா தங்களை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளன.