சீன ஆதரவாளரான மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்ஸு, இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்து அடாவடி செய்ததால், 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது.
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சீன ஆதரவாளரான முகமது முய்ஸு வெற்றி பெற்று பதவியேற்றார். இதனால், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அந்த வகையில், மாலத்தீவில் உள்ள இந்திய படைகளை மார்ச் 15-ம் தேதிக்குள் திரும்பப் பெறும்படி இந்தியாவிடம் வலியுறுத்தினார்.
மேலும், வெற்றிபெற்ற கையோடு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் முகமது முய்ஸு. பின்னர், சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய முகமது முய்ஸு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார். அதேபோல, அந்நாட்டு அமைச்சர்கள் சிலரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும், இந்தியர்களையும் தரக்குறைவாக விமர்சித்தனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையே ,மாலத்தீவுக்கு ட்ரோனியர் ரக விமானத்தை இந்தியா வழங்கியது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானத்தை பயன்படுத்த முகமது முய்ஸு அனுமதி மறுத்ததால்தான் 14 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாகப் போயிருக்கிறது.
அதாவது, மாலத்தீவின் கபி அலிப் விலிங்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி இருந்தது. இதனால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்த சூழலில், இச்சிறுவனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது, மேல் சிகிச்சைக்காக தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, சிறுவனை அழைத்துச் செல்ல இந்தியா வழங்கிய ட்ரோனியர் விமானத்தைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்ஸு அனுமதி வழங்கவில்லை. இதனால் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
ஆகவே, 16 மணி நேரத்திற்கு பிறகுதான் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து, இந்திய விமானத்தைப் பயன்படுத்த அதிபர் முகமது முய்ஸு அனுமதி அளிக்காததால்தான் சிறுவன் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை உரிய நேரத்தில் தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆகவே, தாமதமான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்து விட்டான்” என்றார்.