பிரபல நடிகர் டேனியல் பாலாஜி தனது 48-வது வயதில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு தனி ஒரு அடையாளம் கொடுத்த நடிகர்களில் டேனியல் பாலாஜியும் ஒருவர்.
இவர் தமிழ் சினிமாவில் பிரபல வில்லன்களில் ஒருவராக இருந்தாலும், ஆரம்பத்தில் புரொடக்ஷன் மேனேஜராக சினிமா துறையில் நுழைந்தார்.
திரைத்துறையில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பிரபல சின்னத்திரையில் தடம் பதித்தார். தனியார் தொலைக்காட்சியில், நடிகை ராதிகா தயாரித்து நடித்த சித்தி தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த கதாபாத்திரத்தில் தனித்துவ முத்திரை பதித்ததால், பாலாஜி என்ற அவரின் பெயர் டேனியல் பாலாஜியாக மாறியது. அதேபோல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, பைரவா, பிகில் போன்ற திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தார்.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக டேனியல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர், மறைந்த பிரபல நடிகர் முரளியின் சகோதரர் ஆவார்.
சினிமா துறையில் வில்லன் கதாபாத்திரத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என தனித்துவத்துடன் அடையாளம் பதித்த டேனியல் பாலாஜியின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என திரைத்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் அவருடைய மறைவுக்கு சினிமா துறையினர், ரசிகர்களும் அவர் நடித்த கதாபாத்திரங்களை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.