2-வது பதவிக் காலத்தின் முடிவில் மிகவும் பிரபலமான அரசாங்கங்கள் கூட ஆதரவை இழக்கும் நிலையில், பாஜக அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு கூடியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூஸ் வீக் பத்திரிக்கைக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில், சீனா, உலகப் பொருளாதாரம், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தனது அரசு சிறப்பான சாதனை படைத்துள்ளதாக மோடி கூறினார்.
இரண்டாவது பதவிக் காலத்தின் முடிவில், மிகவும் பிரபலமான அரசாங்கங்கள் கூட ஆதரவை இழக்கத் தொடங்குகின்றன. கடந்த சில ஆண்டுகளில் உலகில் அரசாங்கங்கள் மீதான அதிருப்தியும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியா ஒரு விதிவிலக்காக நிற்கிறது. எங்கள் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.
இந்தியாவை “ஜனநாயகத்தின் தாய்” என்று போற்றிய மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, 2019 பொதுத் தேர்தலில் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர், தற்போது, 970 மில்லியனுக்கும் அதிகமான தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள் என்று கூறினார்.
இந்தியா முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். தொடர்ந்து அதிகரித்து வரும் வாக்காளர் பங்கேற்பு இந்திய ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு ஒரு பெரிய சான்றிதழ் என்றும் அவர் கூறினார்.
நாங்கள் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். சரக்கு மற்றும் சேவை வரி, பெருநிறுவன வரி குறைப்பு, திவால் குறியீடு, தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள், மற்றும் FDI விதிமுறைகளில் தளர்வு. இதன் விளைவாக, எளிதாக வணிகம் செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பகுதியைக் கொண்ட ஒரு நாடு இந்தத் துறைகளில் உலகளாவிய தரநிலைகளை ஏற்றுக்கொண்டால், அது உலகில் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எல்லைகளில் நிலவும் சூழலுக்கு விரைந்து தீா்வு காண வேண்டியது அவசியம். அப்போதுதான், இருதரப்பு உறவுகளில் உள்ள அசாதாரணத் தன்மையை நாம் பின்தள்ள முடியும்.தூதரகம், ராணுவ ரீதியில் நோ்மறையான, ஆக்கபூா்வமான இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் எல்லையில் அமைதியை மீட்டெடுக்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் உடனான உறவுகள் குறித்த கேள்விக்கு, பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழ்நிலையில், பிராந்திய அமைதி, பாதுகாப்பு, வளமையை மேம்படுத்த இந்தியா எப்போதும் ஆதரவாக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.