சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக சென்னை மாநகரத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் தண்ணீர் வற்றி, நீர்மட்டம் குறைந்து வருகிறது. உரிய நேரத்தில் பருவமழை பெய்யாவிட்டால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ஏரிகளின் நீர்மட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்.
தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் செம்பரம்பாக்கம், பூண்டி,சோழவரம், வீராணம்,புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்த ஏரிகளில் சரியான அளவில் நீர்இருப்பு இருந்தால் மட்டுமே கோடைகாலங்களில் சென்னைவாசிகளின் குடிநீர் தேவையை எந்தவொரு சிரமமின்றி நிறைவேற்ற முடியும். ஏரிகளில் நீர்மட்டம் சற்று குறைந்து விட்டாலும்,கோடை காலத்தில் மக்களின் இயல்புவாழ்க்கையில் அது கடுமையாக எதிரொலிக்கும்.
இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுவதால், அப்படிப்பட்ட நிலைமையை நோக்கி தான் சென்னை நகர்ந்து கொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியின் முழுகொள்ளளவு மூன்றாயிரத்து 231 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில்,கோடை வெப்பத்தின் காரணமாக நீர்மட்டம் தற்போது ஆயிரத்து 20 மில்லியன் கனஅடி என்ற அளவில் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டில் இதே தேதியில் ஆயிரத்து 199 மில்லியன் கன அடியாக நீர்மட்டம் பதிவாகி இருந்தது.
சோழவரம் ஏரியிலும் இத்தகைய நிலையே காணப்படுகிறது.இந்த ஏரியின் முழுகொள்ளளவு ஆயிரத்து 81 மில்லியன் கனஅடி. ஆனால் தற்போது நீர்மட்டம் 130 மில்லியன் கனஅடியாக மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டில் இதே தேதியில் 787 மில்லியன் கனஅடி அளவுக்கு நீர்இருப்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களிலேயே மிகப்பெரும் நீர் கொள்ளளவை கொண்ட ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி பார்க்கப்படுகிறது. இதன் முழுகொள்ளளவு மூவாயிரத்து 645 மில்லியன் கனஅடியாகும்.ஆனால் ஏரியில் தற்போதைய நீர்மட்டம் இராண்டாயிரத்து 389 மில்லியன் கனஅடியாக மட்டுமே உள்ளது. கடந்தாண்டில் இரண்டாயிரத்து 799 மில்லியன் கனஅடி நீர் இருந்தது.
மூன்றாயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட புழல் ஏரியில் நிலைமை சற்று வேறுபட்டு காணப்படுகிறது. கடந்த ஆண்டில் இரண்டாயிரத்து 424 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் இரண்டாயிரத்து 930 மில்லியன் கனஅடி நீர்இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவே கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 386 மில்லியன் கனஅடி மட்டுமே இந்த ஆண்டில் நீர் தேக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது 474 மில்லியன் கனஅடியாக பதிவாகியிருந்தது. மொத்தம் 500 மில்லியன் கனஅடி நீரை தேக்கிவைக்கும் கொள்ளளவை கொண்டதாக கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி உள்ளது.
ஆயிரத்து 465 மில்லியன் கன அடி கொள்ளவை கொண்ட வீராணம் ஏரியில் கடந்த ஆண்டில் இந்த நேரத்தில் 580 மில்லியன் கனஅடி நீர்மட்டம் பதிவாகி இருந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆறு ஏரிகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் தற்போது ஆறாயிரத்து 855 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே தற்போது இருப்பு உள்ளது.
கடந்த ஆண்டில் இந்த தேதியில் எட்டாயிரத்து 263 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுமார் ஆயிரத்து 400 மில்லியன் கனஅடி நீர் குறைந்து காணப்படுகிறது.
கத்திரி வெயில் இன்னும் தொடங்காத நிலையில்,தற்போதே ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது சென்னை மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.