தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரே நேரத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
இந்த விலை உயர்வால் வருத்தமடைந்துள்ள மக்கள், இந்த கட்டண உயர்வுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் “JioBoycott” என்றும், “BSNLkigharwapsi” என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கள் சமூக வலைத்தளங்களில், இப்போது பரபரப்பாக ட்ரெண்டாகி வருகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல் போன்ற இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக Antique Stock Broking தகவல் தெரிவித்திருந்தது.
அது போலவே, அந்நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. ஜூலை 3ஆம் தேதி முதல் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களும், ஜூலை 4 ஆம் தேதி முதல் வோடபோன் ஐடியா நிறுவனமும், புதிய விலையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளன.
2ஜி வாடிக்கையாளர்களை 4ஜிக்கு மாற்றுவது மற்றும் 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டிலும் அதிக டேட்டா திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களின் இடம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத இந்த விலை உயர்வால், மொபைல் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள், எக்ஸ் தளத்தில், “#JioBoycott” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி X தளத்தில் 40,000-க்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்று பெரிய தொலை தொடர்பு நிறுவனங்களை விடவும், அரசுக்குச் சொந்தமான BSNL மிகவும் மலிவான திட்டங்களைக் கொண்டுள்ளது.
30 நாட்கள் கணக்கில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை 199 ரூபாய் ஆகும். அதே சேவையை வழங்க ஏர்டெல் நிறுவனம் 379 ரூபாய் வசூலிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 28 நாட்கள் கணக்கில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்க 349 ரூபாய் வசூலிக்கிறது.
மேலும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலைகளை 600 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஓராண்டுக்கான ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 2,999 ரூபாயிலிருந்து 3,599 ரூபாயாக உயர்த்தி இருக்கின்றன.
இதனால், ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்திய இந்த 3 நிறுவனங்களைப் புறக்கணிக்க வாடிக்கையாளர்களில் பலர், முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவற்றுக்கு மாற்றாக, BSNL-மாற இருப்பதாகவும் பதிவிட்டு வருகிறார்கள். இதன் வெளிப்பாடாகவே , ‘JioBoycott’ இணையாக, ‘BSNLkigharwapsi’ ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
எனவே , ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வால் பாதிப்படைந்தவர்கள், 5G இணைப்பையும் விட்டுவிட தயாராக இருப்பதாக தெரியவருகிறது .