மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் இன்றிரவு கோலாகலமாக தொடங்குகிறது.
33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அண்மையில் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பாரிசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
உடல் குறைபாட்டுக்கு ஏற்ப 22 விளையாட்டு போட்டிகள் வகைப்படுத்தப்பட்டு 549 பந்தயங்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில், இந்திய பாரா ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் மற்றும் பாரா குண்டு எறிதல் வீராங்கனை பாக்யஶ்ரீ ஜாதவ் ஆகியோர் தேசியக்கொடியை ஏந்தி வீரர்களை வழிநடத்தி செல்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து மாரியப்பன், துளசிமதி, மனிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீசிவன், சிவராஜன் சோலைமலை, கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையிலான வீரர்கள் பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.