மண்ணுயிரை தன்னுயிரைப் போல் நினைத்து அன்பு செய்யுங்கள் என்ற வாக்கிற்கு ஏற்று விளக்கமாக வாழ்ந்து மறைந்த மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று. நாடு போற்றும் மகா கவிஞனாக, பன்முகப் படைப்பாளியாக திகழ்ந்த மகாகவி பாரதியார் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
”ஆடுவோமே பள்ளு பாடுவோமே”
”வந்தே மாதரம் என்போம்”
”செந்தமிழ் நாடென்னும் போதினிலே”
”தாயின் மணிக்கொடி பாரீர் “
என சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு எண்ணற்ற பாடல்களை பாடி நாட்டு மக்களின் மனதில் விடுதலை உணர்வை தூண்டியதில் பெரும்பங்கு மகாகவிக்கு மட்டுமே உண்டு.
சுப்பிரமணியன் எனும் பெயரில் சின்னச்சாமி, லட்சுமி அம்மையார் மகனாக அறியப்பட்ட சிறுவன், தன் பதினொன்றாம் வயதிலேயே பாரதி என அனைவராலும் பாராட்டப்பட்டார். பாரதி முதல் மகாகவியாக உருவெடுத்தது வரையிலான காலகட்டம் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஆகும்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதிமறுப்பு என பொதுநலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மகாகவி பாரதியார் தன் பேச்சால், எழுத்தால், செயலால் இன்றளவும் நாட்டு மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்.
கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், இதழியலாளர், அரசியல்வாதி, சமூக தீர்திருத்தவாதி என மகாகவி பாரதியார் பயணித்த பரிணாமங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
இந்திய விடுதலை, உலக வரலாறு, மானுடம் குறித்த பாரதியாரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் இளம் தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.
”எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேணும் தெளிந்த நல்லறிவு வேண்டும் “ என்ற வரிகளுக்கு ஏற்ப தான் கொண்ட உறுதியாலும், தன்னம்பிக்கையாளும் தடைகளை தகர்த்தெறிந்தார் மகாகவி பாரதியார்.
தாய்மொழி தமிழ் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்த பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணொம் என கவி புனைந்தார். சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரஞ்ச், ஆங்கிலத்தில் தனிப் புலமை பெற்றவராக திகழ்ந்த பாரதியார், அம்மொழிகளில் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்தார்.
எழுத்திற்கும், பேச்சிற்கும் இடைவெளியில்லாத வாழ்க்கையை வாழ்ந்த பாரதியார். தான் பிறந்த சமூகத்திலும், வாழ்ந்த சமூகத்திலும் நிலவிய அனைத்துவிதமான மூட நம்பிக்கைகளை எதிர்த்து அனைவரும் சமம் என்பதை துணிச்சலோடு முழங்கினார்.
தமிழ், கவிதை, எளிமை, மனிதம், ஈரமும் இணைந்தவராக தன்னை கட்டமைத்துக் கொண்ட மகாகவி பாரதி, தன் முப்பத்தி ஒன்பதாம் வயதில் உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றாலும் உலக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்.