இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் மசூதியை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று உள்ளுர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்பு வாரியம் ஆக்கிரமித்துள்ள சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சிம்லாவில் கட்டப்பட்டுள்ள சஞ்சௌலி மசூதி விவகாரம் கடந்த 14 ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, மசூதிக்கு அருகிலுள்ள மலியானா பகுதியில் ஒரு தொழிலதிபர் மீது சில முஸ்லிம் இளைஞர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சஞ்சௌலி மசூதிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சௌரா மைதானத்தில், இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், தேசியக் கொடியை ஏந்திய படி நடந்த ஆண்களும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். சஞ்சௌலியில் உள்ள சட்ட விரோத மசூதியை இடிக்க வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஹிந்து ஜாக்ரன் மஞ்சின் ஹிமாச்சல் பிரிவின் தலைவரான கமல் கவுதம், எல்லை தாண்டி வந்த அந்நியர்களுக்கு அடைக்கலம் கொடுக்க சஞ்சௌலி மசூதி பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும், இந்த விவகாரம் மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. ஊரக வளர்ச்சி அமைச்சர் அனிருத் சிங், அரசு நிலத்தில் இருக்கும் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்று கூறியதோடு, இந்து அமைப்புக்களுக்கு ஆதரவாகவும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருந்தார்.
1960ம் ஆண்டு முதல் சஞ்சௌலி மசூதி உள்ளது என்ற குற்றச்சாட்டை நிராகரித்த அமைச்சர், 2010ம் ஆண்டில் தான் கட்டுமான பணி தொடங்கியது என்றும், அதற்கான அனைத்து அரசு ஆவணங்களையும் சட்டசபையில் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். மேலும், 2019ம் ஆண்டில் சட்டவிரோதமாக நான்கு கூடுதல் தளங்களும் அந்த மசூதியில் கட்டப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆக்கிரமித்து மசூதி கட்டியவர்கள் மீது அரசு மெத்தனமாக இருக்காது என பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் பதிலளித்திருக்கும் நிலையில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவும், சர்ச்சைக்குரிய மசூதி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ஜெய் ராம் தாக்கூர், இது மதப் பிரச்சினை அல்ல என்றும், சட்டவிரோத மசூதிக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்நிலையில், சஞ்சௌலியில் சர்ச்சைக்குரிய மசூதி தங்களுக்குச் சொந்தமானது என்று வக்ஃப் வாரியம் கடந்த சனிக்கிழமை சிம்லா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஓற்றை மாடி மசூதி எப்படி ஐந்து மாடிக் கட்டிடடமாக மாறியது என்பது குறித்த அறிக்கையை சமர்பிக்கும்படி வக்ஃப் வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, சஞ்சௌலி உள்ளூர்வாசிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜகத் பால், மசூதி கட்டப்பட்டுள்ள நிலம் மாநில அரசின் வருவாய்த் துறைக்கு சொந்தமானது என்றும், வக்பு வாரியம் அந்நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள மசூதியில் இருக்கும் இஸ்லாமிய மதத்தினரால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் விளக்கமாக குறிப்பிட்டு நீதிமன்றத்தில் உள்ளூர்வாசிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சஞ்சௌலி வழக்கு தொடர்பான 45வது விசாரணை நடந்துமுடிந்த நிலையில் அடுத்த விசாரணையை வரும் அக்டோபர் 5 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சமீபகாலமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ரோஹிங்கியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக குடியேறி இருப்பதாகவும்,தெரிவிக்கும் உள்ளுர் மக்கள், மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது முறையான விசாரணை நடத்தப் பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.