கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டங்கள் ஒயாததால், மக்களின் நம்பிக்கையை முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதான இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது அரசியல் வாழ்வையும் ஆட்டம் காண வைத்துள்ள இந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள RG Kar மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர், கருத்தரங்கு அறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை கொல்கத்தா காவல்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை என்று பொதுமக்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இதனையடுத்து, கொல்கத்தா உயர்நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் படுகொலைக்கு நீதிகேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த புதன்கிழமை இரவு 9 மணி முதல் 10 மணி வரை பயிற்சி மருத்துவர்கள், விளக்குகளை அணைத்துவிட்டு, நகரின் முக்கிய சாலைகளில் மனித சங்கிலி அமைத்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
மொத்த நகரமே இருளில் மூழ்கியதால்,கொல்கத்தா மக்களும் மம்தா அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை, இல்லத்தரசிகள் முதல் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் முதல் மருத்துவர்கள், வீட்டுப் பணியாளர்கள் என அனைத்துத் தரப்புப் பெண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள விளக்குகளை அணைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்தார்.
கைகளில் மெழுகுவர்த்திகள் ஏந்தியபடி, பாடல்கள்,தெரு நாடகங்கள், கோஷங்கள், மற்றும் மொபைல் போன் டார்ச் ஒளியை வீசிய படி, மருத்துவர்கள் நீதிக்காக குரல் கொடுக்கும் போராட்டமாக அமைந்திருந்ததாக உள்ளுர் மக்கள் சொல்கிறார்கள்.
கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு குற்றவாளியையும் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,காவல் துறை ஆணையர் மட்டுமல்ல முதல்வர் மம்தா பானர்ஜியும் பதவி விலக வேண்டும் என்றும் மருத்துவர்களும் பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தலைநகரின் நகரின் ஒவ்வொரு மூலையிலும் மற்றும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், “இரவை மீட்டெடுப்போம் என்ற பிரச்சாரம் தீவிரமாகி உள்ளது.
நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் வெளிப்படையாக அச்சமின்றி தெருக்களில் இறங்கி, போராடுவதும், மருத்துவர்களும், ஸ்விக்கி ஜொமாட்டோ போன்ற நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்களும், சராசரி சிவில் சமூக பணியாளர்களும், ஒரே குரலாக , நீதிவேண்டும் ,முதல்வர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ச்சியாக தன்னிச்சையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யாமல், சமூக ஊடகங்களில் நீதி கேட்டு பதிவிடும் மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கும் மம்தாவின் காவல் துறை போலி செய்தியை பரப்பியதாக இதுவரை 10 எஃப்ஐஆர்கள், 35 வழக்குகள் பதிவு செய்தும் மற்றும் 200 சம்மன்களை அனுப்பியுள்ளனர்.
காவல்துறையினர் தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இது போன்ற அராஜக அடக்குமுறை செயல்கள் மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடந்த கண்டன பேரணியில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த முன்னாள் மாணவர்கள், களிமண் கலைஞர்கள், கை ரிக்சா ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். இதில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் பெற்றோரும் பங்கேற்றனர்.
அரசு நிர்வாகத்தின் பொறுப்பற்ற நிலை, சட்டம் ஒழுங்கு சீரழிவு, பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம் சொல்லும் போக்கு, முதல்வரின் எதேச்சாதிகாரப் போக்கு ஆகியவை, அரசு மீது மக்களுக்கு வெறுப்பையும் எதிர்ப்பையும் அதிகரித்துள்ளன.
பயிற்சி பெண்மருத்துவரின் கொடூரமான கொலை மற்றும் அரசின் அத்துமீறல்கள் அதை தொடர்ந்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மம்தா அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப் புள்ளி வைத்து விடும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்பார்த்ததை விட எதிர்பாராத சம்பவங்களே நடைபெறுகின்றன என்பதே உண்மையான நிலையாக உள்ளது.