பயண தூரத்துக்கு ஏற்ப வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கம், கிரெடிட் கார்டு உள்ளிட்டவை மூலம் கட்டணங்கள் செலுத்தப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு நேர விரயம் ஏற்பட்டு வந்தது.
இதனை போக்க பாஸ்டேக் முறை அமலுக்கு வந்த நிலையிலும் , விடுமுறை காலங்களில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.
எனவே பாஸ்டேக் முறையுடன் குளோபல் நேவிகேஷன் முறையை பயன்படுத்தி வாகன ஓட்டிகளின் பயண தூரத்திற்கேற்ப சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன் சோதனை முறை ஏற்கனவே பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலைகளிலும், அரியானா மாநிலத்திலும் முதன்முறையாக நடத்தப்பட்டது.
மத்திய அரசின் இந்த புதிய நடைமுறை நாடு முழுவதும் உள்ள சில நெடுஞ்சாலைகளிலும், விரைவுச் சாலைகளிலும் மத்திய போக்குவரத்து அமைச்சகம் அமலுக்கு கொண்டு வந்தது.
வாகன ஓட்டிகளின் தூரத்தை கணக்கிடுவதற்காக ஓ.பி.யு எனப்படும் கருவி வாகனங்களில் பொருத்தப்பட வேண்டியிருக்கும் எனவும் இக்கருவி செயற்கைகோள்களுடன் இணைப்பு என்பதால் முதல் 20 கிலோ மீட்டருக்கு கட்டணங்கள் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓ.பி.யு கருவி பயன்பாட்டால் சுங்கச்சாவடி தேவைகள் இனி இருக்காது எனவும் வாகன நெரிசலை தவிர்க்க முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மேலும், சுங்கச்சாவடிகளையொட்டி 20 கிலோ மீட்டருக்கு அமைந்துள்ள குடியிருப்பு வாசிகள் கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.