இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதன் விளைவாக சந்திரயான் 4, வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் மற்றும் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் 1 ஆகிய விண்வெளித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நான்காவது நிலவு பயணத்துக்கு சந்திரயான் 4 என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அரசு 2 ஆயிரத்து 104.06 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளைச் சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும், இதை 2040 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தவும், சந்திரயான் 4 திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
2035ம் ஆண்டுக்குள் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் என்ற இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்குவதும், 2040ம் ஆண்டுக்குள், நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புதல் ஆகியவை அமிர்த கால இந்தியாவின் விண்வெளித் திட்டங்களாகும். இவற்றுக்கான விரிவான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல் திட்டங்களையும் மத்திய அரசு வகுத்திருக்கிறது.
எதிர்கால இந்திய விண்வெளி திட்டங்களுக்குத் தேவையான முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் வகையிலும், சந்திரயான் 4 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நான்காவது சந்திரப்பயணமான சந்திரயான் 4, பணி ஒப்புதல் கிடைத்த 36 மாதங்களுக்குள் முடிவடையும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
இந்தத் திட்டமானது இந்திய தொழில்துறை மற்றும் கல்வியாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை உள்ளடக்கி, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட ககன்யான் திட்டம், மனிதர்களை குறைந்த புவி வட்டப்பாதைக்கு அனுப்பவும், நீண்ட கால அடிப்படையில் இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களுக்கு அடித்தளம் அமைக்கவும் வகை செய்கிறது.
வரும் 2028ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் எட்டு பயணங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட ககன்யான் திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, ஒதுக்கப் பட்ட நிதியுடன் கூடுதலாக 11,170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ககன்யான் திட்டத்துக்கான மொத்த நிதி 20,193 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தின் முதல் தொகுதியை 2028 க்குள் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், நிலவுக்குச் சென்று மீண்டும் வருவதற்கான தொழில்நுட்பத்தை நிரூபிப்பதை சந்திரயான் 4 முதன்மையாக இலக்காகக் கொண்டுள்ளதாகவும் , இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல், வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதற்காக 1,236 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி, வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் 2028ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுக்கிரனின் மேற்பரப்பு, வளிமண்டலம் மற்றும் சுக்கிரனில் சூரியனின் தாக்கம் பற்றிய ஆய்வுகளைச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தியாவின் விண்வெளி லட்சியங்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் திட்டமான அடுத்த தலைமுறை வெளியீட்டு வாகனத்தின் (NGLV) வளர்ச்சிக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய ஏவுகணை வாகனமானது குறைந்த புவி வட்டப்பாதைக்கு 30 டன் எடையுள்ள பேலோடுகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், தற்போதைய திறனை மூன்று மடங்காக உயர்த்துவதோடு, செலவைக் குறைக்க மறுபயன்பாட்டை உள்ளடக்கிதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மொத்தம் 8240.00 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டம் 96 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளித் துறையில், இந்தியா தொடர் வெற்றிகளைக் குவிக்க தயாராகி விட்டது என்று விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.