இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு சூளுரை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இது தவிர சிரியாவின் எல்லையோர பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஈரான் ஆதரவு ஆயுத குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை இஸ்ரேல் குண்டு வீசி தாக்கி கொன்ற நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கியதில், டெல் அவிவ் நகரில் 30 பேர் பலியான நிலையில், பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தாக்குதலை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் எனவும் சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நமது உறுதியையும், எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கான நமது உறுதியையும் ஈரானின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியா்கள் விழிப்புடனும், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களிலேயே தங்கியிருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதுடன் இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.