நெய்வேலி NLC சுரங்கத்தில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் NLC சுரங்கத்தில், கடந்த ஜூன் 9-ம் தேதி இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் என்பதும், உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்காக வந்தவர் மாயமானதும் போலீசாருக்கு தெரியவந்தது.
உடற்கூறாய்வில் இளைஞர் சிவசங்கர் தாக்கப்பட்டதால் உயிரிழந்திருப்பது தெரியவந்த நிலையில், நெய்வேலி தெர்மல் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் நெய்வேலி NLC நிறுவனத்தில் பணிபுரியும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையைச் சேர்ந்த அனுஜ் மற்றும் அங்கீத் சிங் ஆகியோர் சிவசங்கரை தாக்கியதும், அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. அதனடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.