டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பயிர்களை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. காற்று மாசுபாட்டை தடுக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், தரக்குறியீடு 339 புள்ளிகளாக இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா கேட், ஆனந்த் விஹார், அக்ஷர்தாம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசுபாடு மற்றும் மூடுபனி காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். நடைபயிற்சி மேற்கொண்டவர்களும் காற்று மாசுபாட்டால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், டெல்லியின் நகர் பகுதியில் காற்று மாசுபாட்டை தடுக்க, சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
ஆம் ஆத்மியின் விளையாட்டு அரசியலால் டெல்லி காற்று மாசுவின் மையமாக மாறிவிட்டதாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார். காற்று மாசுபாட்டிற்கு எதிராக மாஸ்க் அணிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியை மாசு இல்லாத டெல்லியாக மாற்றுவோம் என்ற ஆம் ஆத்மியின் வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடைவிதித்துள்ளது எனக்கூறிய அவர், 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புகை கோபுரம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். யமுனை நதி நச்சு நுரையுடன் செல்வதாக கூறிய அவர், டெல்லியை விஷம் நிறைந்த மாசு நகரமாக ஆம் ஆத்மி மாற்றிவிட்டதாக குறிப்பிட்டார்.