வார விடுமுறை முன்னிட்டு கொடைக்கானல் மற்றும் ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயனிகள் திரண்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான, ஒகேனக்கல்லுக்கு திரளான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதன்படி விடுமுறை தினமான இன்று குடும்பம் குடும்பமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்துள்ளனர்.
பரிசல் பயணம் செய்தும் நீர்வீழ்ச்சிகளில் குளித்தும், காவிரியின் அழகை ரசித்துச் செல்கின்றனர். வியாபாரம் களைகட்டியதனால் பரிசல் ஓட்டிகள் மற்றும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் பெய்த பரவலான மழைக்கு பின் ரம்மியமாக காட்சியளிக்கும் பகுதிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று மழை இல்லாமல் மிதமான வெப்பம் நிலவி வருகிறது.
குறிப்பாக முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கோக்கர்ஸ் வாக் சுற்றுலா தலத்தில் இருந்து எதிரே உள்ள மலைமுகடுகளை பார்க்கும் போது வெண்பனி மூட்டங்கள் தவழ்ந்து செல்கிறது. அவை கடல் அலை போல ரம்மியமாக காட்சியளித்தது. இந்த ரம்மியமான காட்சியை பார்த்து ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து சென்றனர்.