விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் பெண் போலீசார் இல்லாமல் சிறுமியை விசாரித்த சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
செம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். இதனையடுத்து சிறுமி வீடு திரும்பிய நிலையில், அவரை காவல்நிலையத்துக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.
அப்போது பெண் போலீசார் இல்லாத நேரத்தில், சிறுமியை தனியாக அழைத்து சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. கண்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், முத்துக்குமாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டார்.