இரண்டு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்புவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் உள்விளையாட்டு அரங்கத்தில், ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்று நிவாரணப் பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நிவாரணப்பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அமுதா நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், விழுப்புரம் மாவட்டம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தெரிவித்தார்.