கடந்த 10 ஆண்டுகளில் உலக சந்தையில் French Fries ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் French Fries இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா, எப்படி French Fries ஏற்றுமதியாளராக மாறியது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு ஏற்றுமதியைப் பொறுத்தவரை இந்தியா உலக சந்தையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அதிகம் அறியப்படாத உண்மை ஆகும்.
இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு உணவுப் பொருட்களின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 1.10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டியுள்ளது. இது, 2026ம் ஆண்டில் 2.82 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் French Fries ஏற்றுமதி ஆகிறது.
ஆனால், 35 ஆண்டுகளுக்கு முன் நிலைமை வேறுவிதமாக இருந்தது. 1990-களின் முற்பகுதியில் French Fries-க்காக பிற நாடுகளையே நம்பியிருந்தது இந்தியா. முதன்முதலாக 1992 ஆம் ஆண்டில் நட்சத்திர ஹோட்டல்களுக்கு வழங்குவதற்காக (Lamb Weston) லாம்ப் வெஸ்டன் நிறுவனம் இறக்குமதி செய்யத் தொடங்கியது. தொடர்ந்து,(McCain Foods )மெக்கெய்ன் ஃபுட்ஸ், இந்தியாவில் அனைத்து மெக்டொனால்டு உணவுக் கடைகளுக்காக அதிக அளவில் இறக்குமதி செய்தது.
2000ம் ஆண்டில் French Fries இறக்குமதிகள் ஆண்டுதோறும் 5,000 டன்களைத் தாண்டியது. 2010 ஆம் ஆண்டில், 7,863 டன்கள் French Fries இறக்குமதி செய்யப் பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில், இந்தியா French Fries இறக்குமதியை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒரு முக்கிய ஏற்றுமதியாளராக வளர்ந்துள்ளது.
இப்போது, இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா,ஜப்பான்,தைவான், வியட்நாம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு French Fries ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் French Fries-க்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.
மொத்த French Fries ஏற்றுமதியில் 80 சதவீதம் குஜராத்தில் உள்ள (HyFun Foods ) ஹைஃபன் ஃபுட்ஸ் வசம் உள்ளது. அடுத்தபடியாக, Iscon Balaji Foods, Funwave Foods and ChillFill Foods ஆகிய நிறுவனங்களும் French Fries ஏற்றுமதி செய்து வருகிறது.
ஆண்டுக்கு 95 மில்லியன் டன்களுக்கு மேல், உருளைக் கிழங்கு உற்பத்தி செய்து,உலக அளவில் உருளைக் கிழங்கு உற்பத்தியில் முதலிடத்தில் சீனா உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 60 மில்லியன் டன் உருளைக் கிழங்கு உற்பத்தி ஆகிறது. இந்திய உற்பத்தியில் பெரும்பகுதி வீட்டுச் சமையலுக்காகப் பயன்படுத்தப் படுகிறது.
அதிலும், நாட்டின் உருளைக்கிழங்கு உற்பத்தியில் வெறும் 7.42 சதவீதம் மட்டுமே குஜராத்தில் அறுவடை ஆகிறது. என்றாலும் HyFun Foods போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடுகின்றன.
வடக்கு குஜராத்தைச் சேர்ந்த விவசாயிகள் French Fries க்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படும் சாண்டனா மற்றும் ஃப்ரைசோனா வகை உருளைக்கிழங்குகளை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்கிறார்கள்.
குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 7,250 விவசாயிகளிடமிருந்து 4,00,000 டன்களை வாங்க HyFun Foods திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக, ஒரு கிலோவுக்கு 13.8 ரூபாய் விலையை என அந்நிறுவனம் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு, 17.45 பில்லியன் டாலராக இருந்த உலகளாவிய French Fries சந்தை, இந்த ஆண்டு, 18.54 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், இந்திய French Fries சந்தை மதிப்பு சுமார் 1.10 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 2.82 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக 2032 ஆம் ஆண்டில்,10.72 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் 4 பில்லியனை எட்டும் எனக் கூறப்படுகிறது.