டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தவறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் டிஐஜி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பின்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்ததாக தெரிகிறது.
அதன் காரணமாக டிஐஜி வருண்குமார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு இரு தரப்பினரும் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் நேற்று நீதிபதி விஜயா முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு டிஐஜி வருண்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அவரது தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
அப்போது மனுவை ஏற்க மறுத்த நீதிபதி, சீமான் ஆஜராகாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், சீமானுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என எச்சரித்த நீதிபதி, வரும் 21-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்ததுடன், அன்று இருதரப்பினரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.