ஒரே ஆண்டில் பிசிசிஐ கோடி கோடியாய் குவித்த வருமானம் பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. பொன் முட்டையிடும் வாத்தாக பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிகள் அசுர வளர்ச்சி பெற்றதன் விளைவாக பிசிசிஐ-யின் வருமானம் வற்றாத ஜீவநதியாக உருவெடுத்துவிட்டது.
டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டிகளை கண்டு ரசித்த கிரிக்கெட் ரசிகர்களை, 2007ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் குதூகலத்தில் திக்குமுக்காட வைத்தது. 20 + 20 ஓவர்கள், பறக்கும் சிக்ஸர்கள், த்ரில் முடிவு, சில மணி நேரத்தில் ரிசல்ட் என கிரிக்கெட்டில் ஒரு புரட்சியை உருவாக்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.
உலகளவிலும், பட்டிதொட்டியெங்கும் கிரிக்கெட் ரசிகர்களை ஒரே குடையின் கீழ் கட்டிப்போட்ட ஐபிஎல் தொடர்தான், தற்போது பிசிசிஐ-யின் கஜானாவை நிரப்பியுள்ளது.
ஐபிஎல் ஜாக்பாட்டால், பிசிசிஐ ஒரே ஆண்டில் பல கோடிகளை அள்ளியுள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் மட்டும் பிசிசிஐ-யின் ஆண்டு வருமானம் 9 ஆயிரத்து 741 கோடியே 70 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் மட்டும் 5 ஆயிரத்து 761 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
பிசிசிஐயின் மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேல், அதாவது 59 சதவிகிதம், ஐபிஎல் தொடர் மூலம் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால்தான் ஐபிஎல் தொடரை பிசிசிஐ-யின் தங்க முட்டையிடும் வாத்து என விவரம் அறிந்தவர்கள் வர்ணிக்கின்றனர்.
இது மட்டுமின்றி ஐசிசி-யிடம் இருந்து ஆண்டுக்கு ஆயிரத்து 42 கோடி ரூபாய் பெறும் பிசிசிஐ, வங்கி டெபாசிட் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாயை வட்டியாகவும் பெற்று வருகிறது. மகளிர் ப்ரீமியர் லீக், இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகளின் மூலம் கிடைக்கும் டிக்கெட் வருமானம், ஒளிபரப்பு உரிமம் எனப் பல வழிகளிலும் பிசிசிஐ வருமானத்தைப் பெற்று வருகிறது.
இதன் காரணமாக பிசிசிஐ சர்வதேச அளவில் மற்ற நாடுகளை விட பணக்கார கிரிக்கெட் வாரியாக உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் வரவு, கிரிக்கெட் மீதான இந்திய ரசிகர்களின் அபரிதமான ஆதரவு போன்றவையுமே, பிசிசிஐ-யின் மாபெரும் வளர்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.