அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நல்லதொரு ஆட்சியை வழங்கினர் என்றும் இன்னும் 100 ஆண்டுகளையும் கடந்து மக்களுக்காகவே நம் இயக்கம் இயங்கும் சட்டப்பேரவையில் சூளுரைத்தவர் ஜெயலலிதா எனவும் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த அதிமுக, இன்றைக்கு ஏளனமாகப் பேசும் அளவுக்கு இருப்பது வேதனையளிக்கிறது எனத் தெரிவித்துள்ள அவர், இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் அதிமுகப் பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்டவர்களில் சிலர் பிரிந்து கிடப்பதாகக் கூறியுள்ள அவர், ஒன்றுபட்ட வலிமைமிக்க அதிமுகவைத்தான் தமிழக மக்களும் தொண்டர்களும் விரும்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
அனைவரது விருப்பத்திற்கேற்ப ஒன்றுபட்ட வலிமைமிக்க அதிமுக என்ற அசுர பலத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் எனவும் கூறியுள்ளார். மேலும், கட்சியில் உள்ள முன்னோடிகள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை சிந்தித்து, வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.