சிவகங்கையில் வைகை ஆற்றில் மிதந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் அனைத்தும் அசல் எனக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருபுவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் ஆற்றில் மிதந்த மனுக்கள் அனைத்தும் நகல் மட்டுமே எனவும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார்.
இதனிடையே மனுக்கள் திருடப்பட்டதாகத் திருபுவனம் வட்டாட்சியர், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் காணாமல்போன மனுக்கள் அனைத்தும் அசல் எனக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் விளக்க அறிக்கையும், திருபுவனம் வட்டாட்சியர் அளித்த புகாரும் முரணாக உள்ளதால் பொதுமக்களிடையே குழப்பம் நிலவுகிறது.