மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்துகளில் படிக்கட்டுகள் பயனற்ற நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரையில் முதன் முறையாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 20 தாழ்தளப் பேருந்துகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்தப் பேருந்துகளில் தவழும் மாற்றுத்திறனாளிகள் வீல் சேருடன் ஏறி பயணிக்கும் வகையில், சாய்வு பலகை வசதி, படியின் உயரத்தைக் குறைக்கும் வசதி, பேருந்துக்குள் வீல் சேர் நகராமல் இருப்பதற்கான சிறப்பம்சங்கள் உள்ள நிலையில், தவழும் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்காக 12 இருக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன.
பேருந்துகள் இயக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் வீல் சேர்களுடன் பயணிக்கும் படிக்கட்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறப்பு பேருந்துகளில் உள்ள சாய்தளப் பலகையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது கூட நடத்துநர்களுக்குத் தெரியவில்லை என வேதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறப்பு பேருந்துகளின் பராமரிப்பு பணிகளில் போக்குவரத்து துறைக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.