வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக 2 நாள் பயணமாகப் பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலத்திற்குச் சென்றார். விமானம் மூலம் தலைநகர்க் கௌகாத்தி வந்த அவரை ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் தர்ராங் மாவட்டம் மங்கல்தோய் பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழா மேடையில் பேசிய பிரதமர் மோடி, அசாமைச் சிறந்த வளர்ச்சி மாநிலமாக உருவாக்க இரட்டை இன்ஜின் அரசு தொடர்ந்து பாடுபடுவதாகவும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் வடகிழக்கு பிராந்தியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்றதாகவும் வரவுள்ள நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி நமது ராணுவத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானால் உருவாக்கப்படும் பயங்கரவாதிகளை ஆதரிப்பதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.