எதிர்கால போர்க் களத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கான நாட்டின் முதல் முப்படைக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீர்திருத்தங்களின் ஆண்டு – எதிர்காலத்துக்கான மாற்றம் என்ற கருப்பொருளில்,16 வது முப்படை தளபதிகளின் ஒருங்கிணைந்த 3 நாட்கள் மாநாட்டை பிரதமர் மோடி கடந்த வாரம் கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,பாதுகாப்புத் தலைமை தளபதி அனில் சவுகான் உட்பட முப்படைகளின் தலைமை அதிகாரிகள் பங்கேற்ற முதல் உயர்மட்ட கூட்டம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
அதிகரித்து வரும் சிக்கலான புவிசார் அரசியல் சூழலில் முப்படைகளின் நிறுவனச் சீர்திருத்தங்கள், ஆழமான ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப நவீனமயமாக்கல் மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த முப்படைகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார். எதிர்கால போர் தயார் நிலைக்கு, கூட்டுறவை விரைவுபடுத்தவும், ஆத்மநிர்பர்தாவை ஏற்றுக்கொள்ளவும், போர் கோட்பாடுகளில் புதுமைகளைப் புகுத்தவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாட்டில் படை தயார்நிலை, திறன் மேம்பாடு மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் கொந்தளிப்பின் தாக்கங்களை மதிப்பிடும் ஒரு முக்கிய அமர்வுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமைத் தாங்கினார்.
முப்படைத் தளபதிகள் தங்கள் அணுகுமுறையில் முன்முயற்சியுடன் இருக்கவும், பிரதமர் மோடியின் இலக்கான சுதர்சன் சக்கரத்தை உருவாக்கப் பாடுபடவும் அழைப்பு விடுத்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “யதார்த்தமான செயல் திட்டத்தை” தயாரிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு நடுத்தர காலத் திட்டத்தையும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒரு நீண்டகாலத் திட்டத்தையும் வகுத்து, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, வழக்கமான போருக்கு அப்பால், சைபர், சுற்றுச்சூழல், உயிரியல் மற்றும் சித்தாந்தப் போர் உள்ளிட்ட வழக்கத்துக்கு மாறான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றைத் தகர்ப்பதற்கு முப்படைகள் தயாராக இருக்கவேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
விண்வெளி, சைபர், தகவல் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், முடிவெடுப்பதை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தது மாநாட்டில் விவாதிக்கப் பட்டது.
மாநாட்டின் முடிவில், சுறுசுறுப்பாகவும், தன்னிறைவுடனும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் சிக்கலான மற்றும் வேகமாக மாறிவரும் பாதுகாப்புச் சூழலின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முப்படைகள் உறுதியாக உள்ளன என்று நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஒரு அதிகாரி, மூன்று படைகள், புதிய சேவை அமைப்பு என்ற சீர்திருத்தத்தை மத்திய அரசு உருவாகியுள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை அதிகாரம், மையப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டுப்பாடு மற்றும் தரப்படுத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ஆகிய மூன்று விஷயங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம் இந்திய பாதுகாப்புத் துறையில் ஒரு சாதனை என்று கூறப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாட்டு கட்டளை மையங்களை மும்பை, பெங்களூரு, அகமதாபாத், குவாலியர், புனே மற்றும் செகந்திராபாத் போன்ற நகரங்களில் உருவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு நிலையமும் முப்படைகளில் ஒன்றின் தலைமையில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தேச நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு என்று மட்டுமில்லாமல் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கும் பங்களிப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதை இந்த ஒருங்கிணைந்த தளபதிகளின் மாநாடு எடுத்துக் காட்டியுள்ளது.