அதிமுகவின் 54ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அதிமுகவின் 54ஆம் ஆண்டு துவக்க விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், தலைமை அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, “அண்ணா வழி திராவிடம், வாழ்விலக்கான அரசியல்” என்ற மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த நிகழ்வில், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.