கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து இரு மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நெல்லை சென்றுள்ளனர். ராதாபுரத்தில் அமைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் 28 மீட்பு படை வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















