காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
மத்திய அரசின் முன்னெடுப்பில் நடைபெறும் இந்த காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் சிறப்பு ரயில் மூலம் பனாரஸ் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு உத்தர பிரதேச அரசு சார்பில் மாலை மற்றும் சால்வை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் காசி விஸ்வநாதர் சுவாமி, அன்னபூர்ணா தேவி மற்றும் விசாலாட்சி அம்மனை மனம் உருகி வழிபட்டனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளித்தனர். இதன் பின் அயோத்தி சென்ற அவர்கள் குழந்தை ராமர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை முன்னெடுத்து, ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட, தங்குமிடம், போக்குவரத்து போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் தமிழர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
















