கிறிஸ்துமஸ் கேக்கை யார் சாப்பிடுவது என்பதில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி நடப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி அரண்மனை கிறிஸ்துமஸ் விழாவில் தவெக பங்கேற்றதால், திமுக புறக்கணித்ததாக தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து கூறாதது ஏன் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மத அரசியல் செய்வதாக சாடினார்.
அஸ்ஸாமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது சிலர் இடையூறு செய்து உள்ளனர். இது விரும்பத்தகாத நிகழ்வு, யார் செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடியே முன்னின்று கிறிஸ்தவ மத விழாவில் பங்கேற்று உள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
விபத்துக்கள் அதிகளவில் நடப்பதால் அரசு பேருந்துகளை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், திமுக தோற்கப் போவது உறுதி என்றும் அண்ணாமலை கூறினார்.
















