துணை முதலமைச்சர் உதயநிதி வருகையை ஒட்டி, சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் திமுக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மெய்யப்பன் (29) என்பவருக்குத் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு தனியார் பீச் ரிசார்ட்டில் இன்று காலைத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து இந்தியாவின் முதல் ‘ஐயன்மேன் 5i50 டிரையத்லான்’ சென்னை மற்றும் டியோஸ்கா டூயத்லான் போட்டியைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வதால் போட்டி நடத்தும் அமைப்பு சென்னை ஈசிஆர் சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்கா எதிரே சென்டர் மீடியனில் கொடிகம்பம் அமைக்கும் பணியில் அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மெய்யப்பன் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது கடப்பாரை மூலம் சென்டர் மீடியனில் கொடிக்கம்பம் நடுவதற்கு குத்தியபோது சென்டர் மீடியன் அடியில் சென்று கொண்டிருந்த மின்சார வயரில் கடப்பாரை பட்டதால் மெய்யப்பன் மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்டார்.
இதனைப் பார்த்தவுடன் இருந்தவர்கள் மெய்யபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மெய்யப்பன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற கானத்தூர் போலீசார் மெய்யப்பன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
















