மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது. குறிப்பாக, மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் பாஜக கூட்டணி வென்று வரலாறு படைத்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு வியாழக்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. பாஜக மற்றும் துணை முதலமைச்ர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஒருபுறமும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ். மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மறுபுறமும் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
மாநகராட்சி தேர்தல் முடிவில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி மும்பையை கைப்பற்றியது.
மொத்தமுள்ள 227 வார்டுகளில், பாஜக தலைமையிலான கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 114 இடங்களை கடந்து மொத்தமாக 118 இடங்களில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் மும்பை மாநகராட்சியில், 30 ஆண்டுகளாக நீடித்த தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, வெளியான தேர்தல் இறுதி முடிவுகளின்படி, மும்பை மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 227 வார்டுகளில், பாஜக 89 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 65 இடங்களில் வென்றுள்ளது. அதேபோல, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 29 இடங்களில் வெற்றிபெற்று பாஜக கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது.
அதேபோல, காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும், ராஜ் தாக்கரேயின் எம்.என்.எஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேசியவாத காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம், சமாஜ்வாதி உள்ளிட்ட மற்ற கட்சிகள் மொத்தமாக 14 இடங்களில் வென்றுள்ளன.
















