மும்பையில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்ட வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மலாட் சட்டமன்ற தொகுதியின் 47-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேஜிந்தர் திவானாவை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 13 ஆயிரத்து 858 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜிந்தர் திவானா வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை மும்பை மக்கள் முறியடித்துள்ளதாக பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், மும்பை மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், இந்த முடிவானது மகாயுதி கூட்டணி அரசின் செயல்பாடுகள் மீதான மாபெரும் அங்கீகாரம் என்றும் கூறியுள்ளார்.
மூன்று இன்ஜின்களை கொண்ட நிர்வாகம் மூலம் உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரையிலான நடைமுறைகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குடிமகனுக்கும் வளர்ச்சி பணிகளை கொண்டு சேர்த்துள்ளதன் வெளிப்பாடாக இந்த தீர்ப்பு உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மொழி அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் மும்பை மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டதாகவும், அவர்களது நோக்கத்தை மும்பை மக்கள் முறியடித்து விட்டதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
















