வரி விதிப்பையே ஆயுதமாக்கி மிரட்டும் ட்ரம்புக்கு, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஐரோப்பிய யூனியன் தக்க பதிலடி கொடுத்துள்ளது. நம்பகமற்ற ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்காவை சார்ந்திருப்பது ஆபத்து என்று உணர்ந்து கனடாவும் இந்தியாவுடன் கை கோர்க்கிறது.
கிரீன்லாந்தைக் கைப்பற்றும் தனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிட்டன் உட்பட 7 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரிவிதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ட்ரம்பின் இந்த அராஜக போக்கே, 18 ஆண்டுகளுக்கும், மேலாக பேச்சுவார்த்தையில் இருந்த இந்திய- ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவாக கையெழுத்தாக காரணமாகி உள்ளது.
உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று போற்றப்படுகிறது.
இதன்படி கிட்டத்தட்ட 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனின் ஏற்றுமதியில் 96.6 சதவீத பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்கியுள்ளது. மேலும் ட்ரம்பின் 50 சதவீத வரிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜவுளி, ரத்தினங்கள், நகைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா லாபகரமான வகையில் ஏற்றுமதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், கடந்த 2018ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சீனாவுக்குச் சென்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அமெரிக்காவுடனான பிரிட்டனின் வர்த்தகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் கனடா பிரதமர் என்ற பெருமையுடன் கடந்த வாரம் சீனாவுக்கு சென்ற கனடா பிரதமர் மார்க் கார்னி, சீன அதிபர் ஜி ஜிங்பிங்-கை சந்தித்து வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவுக்குள் சீனா தனது பொருட்களைக் கடத்துவதற்கான தலைவாசலாக மாற்ற நினைக்கும் பிரதமர் மார்க் கார்னியின் எண்ணம் பலிக்காது என்று கூறியுள்ள ட்ரம்ப், கனடா மீது கூடுதலாக 100 சதவீத வரிகளை விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்காவில் விற்கப்படும் எந்தவொரு கனடா விமானத்துக்கும் 50 சதவீதம் வரி விதிப்பதாக அச்சுறுத்திய ட்ரம்ப், கனடாவின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமான பாம்பார்டியர் உட்பட அனைத்து கனடா விமானங்களின் சான்றிதழ்களையும் ரத்து செய்வதாக கூறியுள்ளார்.
ட்ரம்பின் மிரட்டலுக்குப் பதிலளித்த பிரதமர் கார்னி, உலகம் ஒருபோதும் எதேச்சதிகாரப் போக்குகளுக்கு அடிபணியத் தேவையில்லை என்பதற்கு கனடா சான்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
முன்னதாக டாவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் உலக ஒழுங்கில் ஏற்பட்ட சிதைவுக்கு ட்ரம்ப் தான் காரணம் என்று மார்க் கார்னி கூறினார்.இதற்குப் பதில் சொல்லும் விதமாக அமெரிக்காவால்தான் கனடா உயிர் வாழ்கிறது என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
ஏற்கெனவே கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மற்றும் திட்டத்தை முன்வைத்த ட்ரம்ப், கனடாவின் கார் மற்றும் கச்சா எண்ணெய் தேவையில்லை என்றும் பேசியிருந்தார்.
இந்தச் சூழலில் இந்தியாவுக்கு மலிவு விலையில் அதிக கச்சா எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை அனுப்ப தயாராகும் கனடா, இந்தியாவிடமிருந்து அதிக சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்ய உள்ளது.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கும், கனடாவின் எரிசக்தித் துறை அமைச்சர் டிம் ஹாட்ஜ்சனுக்கும் இடையே கடந்த செவ்வாய் கிழமைநடந்த பேச்சு வார்த்தையில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.
அடுத்த வாரம் இந்தியாவுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி வரும் போது இருநாடுகளும் இடையே யுரேனியம், அணுசக்தி ஒத்துழைப்பு, எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் வர்த்தகம் தொடர்பான முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நியூசிலாந்து,ஓமன் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ள நிலையில்,அடுத்த மாதம் பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவும் இந்தியாவுக்கு வந்து வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.
விசித்திரமான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அலட்சியம் செய்துவிட்டு, உலகின் முன்னணி நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது
















