இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரையிலான ஆங்கில கால்வாயை 72 கிலோமீட்டர் தூரம் நீந்தி கடந்து முதல் இந்திய அணி என்ற பெருமையை இந்திய சானல் நீச்சல் அணி பெற்றது. இக்குழுவில் தமிழகத்தின் தேனியைச் சேர்ந்த சினேகனும்15 ஒருவர்.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர், அதிகாலை 3.00 மணிக்கு இங்கிலாந்தில் உள்ள டோவர் ஹாம்பைர் கோஹா பீச்சில் இருந்து 36 கி.மீ , தூரம் நீந்த தொடங்கினர். அங்கிருந்து பிரான்சை அடைந்து மறுபடியும் இங்கிலாந்து வரை 36 கி. மீ , தூரம் நீந்தி இடத்தை அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஜூலை 19 காலை 10. 50 மணிக்கு தொடர் ஓட்ட முறையில் (ரிலே) ஒருமணி நேரத்திற்கு ஒருவர் என்று 6-பேர் நீந்தி சாதனையை நிறைவு செய்தனர்.
முன்பெல்லாம், இந்திய வீரர்கள் எப்போதும் ஒரு வழிப்பாதையாக இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று பின்னர் பிரான்சில் இருந்து இங்கிலாந்திற்கு படகில் வந்து விடுவார்.
ஆனால் இந்த முறை இங்கிலாந்தில் நீந்த தொடங்கி இங்கிலாந்தில் நிறைவு செய்தது என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்த கடல் மற்ற கடல்கள் போலன்றி அதிக நீரோட்டம் உள்ளதாகவும் , தண்ணீரில் குளிர் 14 முதல் 15 டிகிரி வரை இருந்ததாகவும், நீந்தி செல்லும் வழியில் ஜெல்லி மீன்கள் அதிகமாக இருந்ததால் நீச்சல் சவாலாக இருந்ததாக வீரர்கள் கூறினர். அதேபோல் வீரர்கள் நீந்தும் வழியில் சுறா மீன்கள் , கடல் நாய்கள் கடந்து சென்றன.
இதற்கு முன் தமிழகத்திலிருந்து குற்றாலீஸ்வரன் என்ற இளைஞர் ஆங்கில கால்வாயை நீந்தி சாதனை புரிந்தார். அவரைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தை சேர்த்த சினேகன் மிக இளம்வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது தமிழர்களுக்கு பெருமை .